/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போனஸ் பெற்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சி! தீபாவளி 'ஷாப்பிங்' களைகட்டியது
/
போனஸ் பெற்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சி! தீபாவளி 'ஷாப்பிங்' களைகட்டியது
போனஸ் பெற்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சி! தீபாவளி 'ஷாப்பிங்' களைகட்டியது
போனஸ் பெற்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சி! தீபாவளி 'ஷாப்பிங்' களைகட்டியது
ADDED : அக் 13, 2025 12:27 AM

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா துவங்கியதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்; தீபாவளியையொட்டி, கடை வீதிகள் நேற்று களைகட்டின.
தீபாவளி நெருங்கியுள்ளது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிட்டிங், சாயம், பிரின்டிங், காம்பாக்டிங், ரைசிங், எலாஸ்டிக், காஜா பட்டன் உள்ளிட்ட பின்னலாடை உற்பத்தி சார் தொழிற்சாலைகளிலும் போனஸ் பட்டுவாடா துவங்கியது.
பின்னலாடை தொழிலாளர்களை பொறுத்தவரை, 12 ஆயிரம் ரூபாயில் துவங்கி, 30 ஆயிரம் ரூபாய் வரையும்; நிறுவன அலுவலக மற்றும் தொழில்நுட்ப பணியாளருக்கு, 16 ஆயிரம் ரூபாய் துவங்கி, 40 ஆயிரம் ரூபாய் வரையும் போனஸ் வழங்கப்படுகிறது.
நிறுவனத்தின் நிதி நிலை, தொழிலாளரின் பணி அனுபவம் மற்றும் பணித்திறன் ஆகியவற்றை பொறுத்து, கூடுதல் போனஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்தாண்டு, அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்த நிறுவனங்களில் உற்பத்தி மந்தமாகிவிட்டது; வர்த்தக இழப்பை சந்தித்துள்ளன. அத்தகைய நிறுவனங்களில், குறைந்தபட்ச போனஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
போனஸ் பட்டுவாடா பண்டிகை கொண்டாட்டத்துக்கு வசதியாக 10 முதல் 15 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் பட்டுவாடா நேற்று முன்தினம் துவங்கியது. பெரும்பாலான நிறுவனங்கள் சம்பளத்துடன் போனஸ் வழங்கியுள்ளன; சில நிறுவனங்கள், நேற்று போனஸ் பட்டுவாடா செய்துள்ளன.
ஜாப் ஒர்க் நிறுவனங்களை பொறுத்தவரை, நிலுவையில் இருக்கும் தொகையை பெற்றே, போனஸ் வினியோகத்தை துவக்குவர். அதன்படி, உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நிலுவை தொகையை பெற்று, வரும், 15ம் தேதி வரை போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளன.
ஆச்சர்யமூட்டும் பரிசுகள் போனஸ் வர தாமதம் ஏற்பட்டாலும், கடந்த வார சம்பளத்தில் இருந்தே, ஜவுளி எடுக்க மக்கள் ஆயத்தமாகிவிட்டனர். இதனால், கடந்த, 5ம் தேதி முதலே, திருப்பூர் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகின்றன. வாடிக்கையாளரை ஈர்க்க, ஆச்சரியமூட்டும் சிறப்பு பரிசு வழங்கி, சலுகை விலையில் விற்பனை களைகட்டியுள்ளது.
கனவு நிறைவேறும் தருணம் ஜவுளிக்கடைக்கு அடுத்தபடியாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம். வீட்டுக்கு தேவையான பீரோ, கட்டில், டேபிள், டைனிங் டேபிள், சேர்கள், ேஷாபா, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
ஒவ்வொரு குடும்பத்தினரும், போனஸ் தொகையை கொண்டு மொபைல் போன் மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, மொபைல் போன் கடைகளிலும் வாடிக்கையாளர் கூட்டம் நேற்று அதிகம் காணப்பட்டது. போனஸ் தொகையால், நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்ற, குடும்பத்துடன் திருப்பூர் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சொந்த ஊருக்கு புறப்பட்ட
தொழிலாளர் குடும்பங்கள்
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை, தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே, திருப்பூரில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். முன்கூட்டியே சொந்த ஊருக்கு செல்லவும் ஆயத்தமாகிவிட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக, ஜவுளி எடுக்கும் வேலையை முடித்து, போனஸ் வாங்கிய கையோடு, நேற்று இரவு முதல், குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்லவும் துவங்கிவிட்டனர்.