ADDED : ஆக 02, 2025 11:33 PM

பா தையை மக்கள் பயன்படுத்தாமல் இருக்க, மர்ம நபர்கள், பள்ளம் தோண்டியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி, 13வது வார்டு இ.பி., காலனி மெயின் ரோட்டில் இருந்து, சத்யா நகர் வழியாக லட்சுமி தியேட்டர் மெயின் ரோட்டுக்கு செல்ல வண்டிப்பாதை ஒன்று உள்ளது. அது, முட்புதர் மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. முட்புதர்களை அகற்றி பாதை அமைத்து தர அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்தினர், முட்புதர்களை அகற்றி பாதை அமைத்து கொடுத்தனர். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் சிலர், பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பெரிய பள்ளம் தோண்டி போட்டுள்ளனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
இ.பி., காலனி மெயின் ரோட்டில் இருந்து, லட்சுமி தியேட்டர் ரோட்டுக்கு விரைவாக செல்ல இந்த வண்டிப்பாதை பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு சிலர், பள்ளம் தோண்டி போட்டுள்ளனர்.
இந்த பாதை வழியாக சத்யா நகருக்கு செல்ல முடியும். அதனால், அவர்கள் வரக்கூடாது, என வீதியின் முகப்பிலும் குழி தோண்டி போட்டுள்ளனர்.
ஏற்கனவே, அப்பகுதியில் பலர் ரோட்டை ஆக்கிரமித்து ஜெனரேட்டர் மற்றும் சொந்த தேவைக்கு ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். அதனை மறைக்கவே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பாதையில் குழி தோண்டிய வர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முன்னர் போலவே பாதையை சீரமைத்து தர வேண்டும்.