ADDED : ஆக 03, 2025 11:46 PM
பல்லடம்:
பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், உட்பிரிவு பட்டா தவறாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்து, இதற்கு உறுதுணையாக இருந்த நில அளவையர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பல்லடம் அண்ணாநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகூர் மீரான், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குனருக்கு புகார்அளித்திருந்தார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் ஜெய்சிங் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:
நாகூர் மீரான் அளித்துள்ள மனு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தவறான உட்பிரிவு பட்டா வழங்க பரிந்துரை செய்தது தொடர்பாக, கோப்பினை கையாண்ட நில அளவையர் பிரியா, வட்ட ஆவண வரைவாளர் சிவச்சந்திரன், வட்டத் துணை ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இவர்களிடம் விளக்கம் பெறப்பட்டு, அந்த விளக்கங்கள் ஏற்க இயலாததாக கருதி, இவர்களது அடுத்த ஊதிய உயர்வு உட்பட எந்த பயன்களும் கிடைக்காத வகையில் மூன்று மாதம் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.