/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகசூல் அதிகரிப்பு! உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்
/
மகசூல் அதிகரிப்பு! உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்
மகசூல் அதிகரிப்பு! உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்
மகசூல் அதிகரிப்பு! உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்
ADDED : ஜன 23, 2025 11:45 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. நடப்பு பருவத்தில், மழையால், படைப்புழு தாக்குதல் குறைந்து, மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்திருந்தது.
வழக்கமாக கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளுக்கு மட்டும் மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கும் மக்காச்சோளம் தேவை அதிகரித்துள்ளதால், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்தது.
இப்பகுதிகளில், கடந்தாண்டு பெய்த பருவமழை, பி.ஏ.பி., - அமராவதி பாசனத்தில் நீர் திறப்பை தொடர்ந்து, கடந்த செப் - அக்., மாதங்களில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது, இப்பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இரு மாதங்கள் வரை அறுவடை நீடிக்கும் நிலையில், வழக்கமான தட்டு அறுத்து, கருது அடிக்கும் முறையிலும், நேரடியாக இயந்திரம் வாயிலாக அறுவடை செய்யும் முறையிலும் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படுகிறது.
மழையால் மகிழ்ச்சி
மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், பருவமழைகள் திருப்தியாக பெய்ததால், சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப்பயிர்களில், படைப்புழு தாக்குதல் பெருமளவு குறைந்து, மகசூல் அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஏக்கருக்கு, 20 முதல், 30 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்து வந்த நிலையில், நடப்பு பருவத்தில், 30 முதல், 40 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது. வருவாய் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அறுவடை செய்யப்படும் மக்காச்சோளத்தை, பெரும்பாலான விவசாயிகள், உடுமலை, பெதப்பம்பட்டி உள்ளிட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து உலர் களங்களில் காயவைத்து, இ-நாம் திட்டத்தின் கீழ், விற்பனை செய்து வருகின்றனர்.
திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:
மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளதால், ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், ஒரே சமயத்தில், 100 டன் வரை மக்காச்சோளம் காய வைக்கும் வசதி உள்ளது.
நவீன ஆய்வகம் வாயிலாக, ஈரப்பதம் பரிசோதனை செய்யப்பட்டு, தேசிய அளவிலான வேளாண் சந்தையான இ - நாம் திட்டத்தின் கீழ், தினமும் மக்காச்சோளம் ஏல முறையில் விற்பனை நடக்கிறது.
ஏராளமான நிறுவனங்கள், வியாபாரிகள் பங்கேற்று, கொள்முதல் செய்து வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் மக்காச்சோளத்திற்கு உரிய தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று, 13.5 டன் மக்காச்சோளம் இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டது. ஒரு குவிண்டால், 2,300 முதல், 2,320 ரூபாய் வரை விற்பனையானது. நடப்பாண்டு, மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, கூறினர்.

