/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடல், மனம் புத்துணர்வு; யோகா எனும் அருமருந்து
/
உடல், மனம் புத்துணர்வு; யோகா எனும் அருமருந்து
ADDED : ஆக 16, 2025 10:07 PM

''தி யானத்துடன் கூடிய யோகாசன பயிற்சி பெறுவதன் வாயிலாக, நலமும், வளமும் நிறைந்த வாழ்வு வாழ முடியும்,'' என்கிறார், கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக தியான யோகாசன பயிற்சி வழங்கி வரும், அவிநாசி ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து.
வயது, 64 ஆகியும், இளமை குன்றா உற்சாகத்துடன், யோகாசன பயிற்சியை வழங்கி வரும் அவர் நம்மிடம் கூறியது: எனது இருபது வயதில் இருந்தே யோகாசன பயிற்சியை பெற துவங்கினேன்; எனது குரு ஆண்டியப்பன். கடந்த, 35 ஆண்டாக தியானத்துடன் கூடிய யோகாசன பயிற்சி வழங்கி வருகிறேன். நிறைய பேர் ஆஸ்துமா, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களிடம் செல்கின்றனர். மருந்து, மாத்திரை வழங்குவதுடன், 'தினசரி யோகாசனம் செய்யுங்கள்' என, மருத்துவர்களே அறிவுறுத்துகின்றனர்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், எந்நேரமும் பதட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்கள் யோகாசன பயிற்சி பெறுவதன் வாயிலாக, பதட்டம் தணிந்து, புத்துணர்ச்சி பெறுகின்றனர்; தாங்கள் மேற்கொள்ளும் செயலில் வெற்றியும் பெறுகின்றனர். அதுவும், தியானத்துடன் கூடிய யோகா பயிற்சி செய்யும் போது, அவர்களின் உடல், மனம் முழு அளவில் நலம் பெறுகிறது.
ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் மத்தியில் யோகாசனம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஆனால், மொத்தமாக அமர்த்தி வைத்து யோகாசன பயிற்சி வழங்குவதை விட, தனித்தனியாக, ஒருவருக்கு ஒருவர் பயிற்சி என்ற அடிப்படையிலான பயிற்சி தான், முழு பலன் தரும்.

