/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோசடி நபர்களிடம் சிக்கும் இளம் தொழில்முனைவோர்
/
மோசடி நபர்களிடம் சிக்கும் இளம் தொழில்முனைவோர்
ADDED : ஏப் 19, 2025 11:30 PM
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழிலில், வர்த்தக பரிவர்த்தனையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, சட்டரீதியாக தீர்வு காணும் வகையில், 'ஆர்பிட்ரேஷன்' கவுன்சில் இயங்கி வருகிறது.
சில மாதங்களாக, தொழில் வர்த்தக புகார் இல்லாத நிலையில், மீண்டும் வடமாநில வர்த்தகர்கள் பண மோசடி செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, இளம் தொழில் முனைவோர் சரக்கு அனுப்பிய பிறகும், பணம் கொடுக்காமல் ஏமாற்றுவது அதிகரித்துள்ளது.
கடந்த, 15ம் தேதி நடந்த, ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பான புகார் அளிக்கப்பட்டது. சட்டரீதியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி துவங்கியுள்ளது.
'ஆர்பிட்ரேஷன் கவுன்சில்' தலைவர் கருணாநிதி கூறியதாவது:
இளம் தொழில் முனைவோர், நன்கு விசாரணை நடத்தி வர்த்தகம் செய்ய வேண்டும். மாறாக, ஆர்வ மிகுதியால், சரியாக விசாரிக்காமல் ஆர்டர் எடுத்து, பணம் கிடைக்காமல் மாட்டிக்கொள்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சட்டரீதியாக தீர்வு காண முடியும். தொழில் நடத்தும் தொழில் முனைவோர், முதலில் சம்பந்தப்பட்ட தொழில்அமைப்பில் உறுப்பினராக இணைய வேண்டும்; தனித்து செயல்படுவது பாதுகாப்பாக இருக்காது. அத்துடன், ரசீது, 'பில்' புக் போன்றவை அச்சிடும் போது, 'ஆர்பிட்ரேஷன் கவுன்சில் விதிமுறைகளுக்கு உட்பட்ட' என்ற வாக்கியத்தை அச்சிட்டு பராமரிக்க வேண்டும்.
அப்போதுதான், பிரச்னை ஏற்படும் போது, விரைவாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர முடியும். ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை அணுகி, தேவையான ஆலோசனைகளை பெறலாம்.

