/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கிணற்றில் விழுந்தவர் பாம்பு கடித்து பலி
/
கிணற்றில் விழுந்தவர் பாம்பு கடித்து பலி
ADDED : ஆக 07, 2024 08:05 PM
செங்கம்,:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்குமார், 23. இவர் மனைவி நிரோஷா, 20. இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமானது. நேற்று இருவரும் வீட்டின் பின்பக்க கிணற்றில் கயிறு கட்டி, வாளியில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது பரமேஸ்குமார், கிணற்றில் தவறி விழுந்தார். இருப்பினும் நீந்தியபடி கிணற்றுக்குள் இருந்த மரங்களை பிடித்து மேலே ஏற முயன்றார். அப்போது அங்கிருந்த பாம்பு அவரை கடித்தது.
பதட்டமடைந்த அவர், மேலே ஏற முடியவில்லை என, மனைவியிடம் கூறியபடி, மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார். கிணற்றில் பாம்பு இருந்ததால் அவரை மீட்க, அக்கம் பக்கத்தினரும் தயங்கினர். புதுப்பாளையம் வனத்துறையினர் அங்கு வந்து, கிணற்றிலிருந்த கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர்.
செங்கத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பரமேஷ்குமாரை மீட்பதற்குள் அவர் உயிரிழந்தார். அவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு, மேலே துாக்கி வந்தனர்.
புதுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். கிணற்றில் பலியான கணவரை பார்த்து, மனைவி நிரோஷா கதறி அழுதது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது.