/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஜப்பான் நாட்டு பக்தர் மே மாதம் முதல் மாயம்
/
ஜப்பான் நாட்டு பக்தர் மே மாதம் முதல் மாயம்
ADDED : ஆக 01, 2024 10:35 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆன்மிகவாதிகள், சுற்றுலா பயணியர் தினமும் வருகின்றனர். அவர்கள், திருவண்ணாமலையிலுள்ள ஆஷ்ரம விடுதிகளில் தங்கி, அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலம், ஆஷ்ரமங்களில் நடக்கும் வழிபாடுகளில் பங்கேற்பது, தியானம் செய்வது என ஆன்மிக பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அண்ணாமலையார் மலை மீது ஏறி தியானம் செய்யும் வெளிநாட்டினருக்கு சில நேரங்களில் வழி தெரியாமல் சிக்கி தவிப்பர். போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்தால், அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பர். இரண்டு ஆண்டுகளாக, வனத்துறை அனுமதியின்றி மலை ஏறக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மே மாதம், ஜப்பான் நாட்டை சேர்ந்த சடோஷி மினெட்டா, 62, திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள ஆஷ்ரமத்தில் தங்கினார். மே 5ல் அங்கிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பாஸ்போர்ட் உள்ளிட்ட அவரது ஆவணங்கள் ஆஷ்ரமத்தில் உள்ளது. இது குறித்து ஆஷ்ரம நிர்வாகம், போலீசில் புகார் செய்தது.
போலீசார், வெளிநாட்டினர் அதிகம் செல்லும் இடம், மலை மீதேறி செல்வோர், ஆஷ்ரமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளவர்களிடம், மாயமான சடோஷி மினெட்டா புகைப்படத்தை காண்பித்து அவரை தேடி வருகின்றனர்.