/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கற்கருவிகளை தீட்டிய கற்குழிகள்; ஆரணி அருகே கண்டுபிடிப்பு
/
கற்கருவிகளை தீட்டிய கற்குழிகள்; ஆரணி அருகே கண்டுபிடிப்பு
கற்கருவிகளை தீட்டிய கற்குழிகள்; ஆரணி அருகே கண்டுபிடிப்பு
கற்கருவிகளை தீட்டிய கற்குழிகள்; ஆரணி அருகே கண்டுபிடிப்பு
ADDED : செப் 16, 2024 06:43 AM

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, பழங்கால மனிதர்கள் கற்கருவிகளை தீட்டிய பாறை கற்குழிகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி வரலாற்று துறை விரிவுரையாளர் மதுரை வீரன், முதுகலை மாணவர் கோகுல்ராஜ் ஆகியோர், ஆரணி பகுதியில் வரலாற்று தேடலுக்கான கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, விஜயநகரம் பகுதியில் பழங்கால மனிதர்கள் தங்களின் கற்கருவிகளை தீட்டிய கற்குழிகளை கண்டறிந்தனர்.
இதுகுறித்து, மதுரைவீரன் கூறியதாவது:
செய்யாறு - ஆரணி வழியில், சக்தி விஜயபுரம் பகுதியில் உள்ள கமண்டல நாகநதியில் ஆய்வு செய்தோம். அங்குள்ள நான்கு பாறைகளில் சிறியதும், பெரியதுமாக வழுவழுப்பான குழிகள் தென்பட்டன. இதுபோல, 10 மீட்டர் சுற்றளவில் உள்ள பாறைகளில் 23 குழிகள் உள்ளன.
இந்தக் குழிகள், 13 -- 15 செ.மீ., நீளம்; 5 - 6 செ.மீ., அகலம்; 2 - 3 செ.மீ., ஆழத்துடன் உள்ளன.
இவை, 4,000த்தில் இருந்து 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், தங்களின் கற்கருவிகளை தேய்த்து, கையடக்கமாகவும், கூர்மையான முனையுடனும் இருக்கும் வகையில் மாற்ற பயன்படுத்தப்பட்டு உள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில், கற்கால மனிதர்கள் பருவகால முகாம்களை அமைத்து தங்கி இருந்திருக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலையில், இதுபோன்ற கற்குழிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியிலும், கற்கால மனிதர்களின் அடையாளம் கிடைத்திருப்பது தொடர் ஆய்வுக்கு வலு சேர்க்கும். இந்த வரலாற்று தடயங்களை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.