/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது
/
மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது
ADDED : ஜன 05, 2025 12:39 AM
கண்ணமங்கலம்:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 55. இவரது மகன் சீராளன், 30, மகள்கள் ராஜலட்சுமி, 28, ராஜேஸ்வரி, 25. ராஜலட்சுமி, ராஜேஸ்வரி திருமணமாகி, இருவருக்கும் குழந்தை இல்லை.
சீராளன் மனைவி தேவிகலா, 25. கணவர் ராணுவத்தில் பணிபுரியும் நிலையில், தேவிகலா, தன் குழந்தைகளுடன் கோவிந்தம்மாளுடன் வசித்தார். கடந்த மாதம், 10ம் தேதி கோவிந்தமாள் வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறி, வேலுார் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கோவிந்தம்மாளின் சாவில் சந்தேகம் உள்ளதாக, ராஜேஸ்வரி கணவர் முருகன் புகார் அளித்தார்.
கண்ணமங்கலம் போலீசார் கோவிந்தம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில், கோவிந்தம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. போலீசார், தேவிகலாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
போலீசார் கூறியதாவது:
கோவிந்தம்மாள் மகள்களுக்கு குழந்தையில்லாததால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். மகனுக்கு மட்டும் இரு குழந்தைகள் இருப்பதால், அதை சொல்லி, மருமகள் நடத்தையில் சந்தேகத்துடன் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த தேவிகலா, கோவிந்தம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தேவிகலாவிடம் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.

