ADDED : ஜன 18, 2025 12:24 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த சித்தாத்துரை கிராமத்தில், முத்தாலம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காணும் பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதி உலா வந்தது.
அப்போது, வீதி உலாவின் போது, மது போதையில் வெளியூரை சேர்ந்த சிலர் நடனமாடி இடையூறு செய்தனர். இதை அப்பகுதியை சேர்ந்த சேத்துப்பட்டு தி.மு.க., ஒன்றிய துணை செயலர் ராஜசிம்மன், 45, தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர்கள் ராஜசிம்மன் மண்டையை உடைத்தனர்.
இதை தடுக்க வந்த அப்பகுதியை சேர்ந்த கோபி என்பவரும் படுகாயமடைந்தார். தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி ராஜசிம்மன் ஆதரவாளர்கள் அவலுார்பேட்டை - தேவிகாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, போராட்டத்தை கைவிட செய்தனர். போலீசார் தப்பியவர்களை தேடி வருகின்றனர்.