/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'மஹா தீபம் ஏற்றும் முறைதாரர் மட்டும் அண்ணாமலையார் மலை மீது செல்ல அனுமதி'
/
'மஹா தீபம் ஏற்றும் முறைதாரர் மட்டும் அண்ணாமலையார் மலை மீது செல்ல அனுமதி'
'மஹா தீபம் ஏற்றும் முறைதாரர் மட்டும் அண்ணாமலையார் மலை மீது செல்ல அனுமதி'
'மஹா தீபம் ஏற்றும் முறைதாரர் மட்டும் அண்ணாமலையார் மலை மீது செல்ல அனுமதி'
ADDED : டிச 12, 2024 01:20 AM
திருவண்ணாமலை, டிச. 12-
''திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை மீது மஹா தீபம் ஏற்ற, கோவில் நிர்வாகத்தில் அனுமதிக்கப்படும் முறைதாரர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்,'' என, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மஹா தீப திருவிழாவில், வழக்கமாக மலை மீது ஏற, 2,500 பேர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இம்மாத துவக்கத்தில், பெஞ்சல் புயல் மழையின்போது அண்ணாமலையார் மலை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில், வ.உ.சி., நகர் பகுதியில் ஒரே வீட்டில் இருந்த, 7 பேர் பலியாகினர்.
இதையடுத்து, தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண பக்தர்களை மலை உச்சியில் அனுமதிப்பது தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறையின் புவியியல் வல்லுனர்கள் கொண்ட குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழு அறிக்கையில், பெருமழையால் மலையின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவுகள், பாறைகள் இடம் பெயர்ந்தும், மலை மீது ஏறும் வழிகளில் அதிகளவில் மண் மூடியும் உள்ளது.
பல இடங்களில் பாறைகள் பெயர்ந்து உருண்டு விழும் நிலையில் உள்ளது. மலை உச்சியில் மண் படிவுகள் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. கொப்பரை எடுத்து செல்லும் பாதையில், மண் சரிவால் பாறைகள் பிடிமானமின்றி தனித்தனியே மண் படிமங்கள் மீது உள்ளது என்பதால், மலையின் உறுதி தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
இக்குழு அறிக்கையின் அடிப்படையில், மலை மீது, மஹா தீபம் ஏற்றும் நிகழ்வை காண செல்லும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையில் தீபம் ஏற்ற வழக்கமாக செல்லும், 2 பாதைகளில் ஒரு பாதை நல்ல முறையில் உள்ளது.
அதன் வழியாக, கோவில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படும், மஹா தீபம் ஏற்றும் முறைதாரர்கள் மட்டும் செல்வர். இவர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் இதர வசதிகள் செய்து தரப்படும்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலை மீதேற அனுமதியில்லை. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மலையேறுவதை தடுக்க, மலையை சுற்றி, போலீஸ் மற்றும் வனத்துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.