/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மஹா தீபத்திற்கு நெய்குட காணிக்கை கோவிலில் சிறப்பு கவுன்டர் திறப்பு
/
மஹா தீபத்திற்கு நெய்குட காணிக்கை கோவிலில் சிறப்பு கவுன்டர் திறப்பு
மஹா தீபத்திற்கு நெய்குட காணிக்கை கோவிலில் சிறப்பு கவுன்டர் திறப்பு
மஹா தீபத்திற்கு நெய்குட காணிக்கை கோவிலில் சிறப்பு கவுன்டர் திறப்பு
ADDED : டிச 12, 2024 01:20 AM
திருவண்ணாமலை, டிச. 12-
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்ற, நெய் குடம் கட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவில் நாளை, 13 ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
பக்தர்கள் நெய் காணிக்கை நேரடியாக செலுத்த வசதியாக, ராஜகோபுரம் அருகே திட்டி வாயிலில், நேற்று தனிகவுன்டர் திறக்கப்பட்டது. இங்கு பக்தர்கள் பாரம்பரியம் மாறாமல், மண்பானை குடத்தில் நெய்யை கொண்டு வந்து செலுத்தினர். இவ்வாறு செலுத்தப்படும் நெய், இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை, மஹா தீபம் ஏற்றும்போது பயன்படுத்தப்படும்.
வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ நெய், 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் ஒரு கிலோ நெய் காணிக்கைக்கு, 250 ரூபாய், அரை கிலோவிற்கு, 150 ரூபாய், கால் கிலோவிற்கு, 80 ரூபாய் என, வசூலிக்கிறது. மேலும், www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் ஆன்லைனிலும் நெய் காணிக்கை செலுத்தலாம். இவ்வாறு காணிக்கை செலுத்துபவர்களுக்கு, ஆருத்ரா தரிசனத்தன்று, மஹா தீப மை முதலில், நடராஜருக்கு சாத்தப்பட்டு, பின்னர், பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர், காடா துணியால் ஆன திரிக்கு, சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு, சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைக்கப்பட்டது.