/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளால் பக்தர்கள் சிரமம் தவிர்ப்பு
/
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளால் பக்தர்கள் சிரமம் தவிர்ப்பு
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளால் பக்தர்கள் சிரமம் தவிர்ப்பு
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளால் பக்தர்கள் சிரமம் தவிர்ப்பு
ADDED : டிச 15, 2024 01:03 AM
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில், ஹிந்து அறநிலையத் துறையுடன் இணைந்து போலீசார், பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான அனுமதி சீட்டுகளை பக்தர்களுக்கு வழங்கியதால், போலி அனுமதி சீட்டு பயன்பாடு தவிர்க்கப்பட்டது.
இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் வரவிட்டதால், கூட்ட நெரிசலின்றி தீபத் திருவிழா சிறப்பான முறையில் நடந்தது.
மேலும், திருவண்ணாமலை நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளில், நெடுஞ்சாலைத் துறையினர் வாயிலாகவும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னைக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால், பக்தர்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
கடந்த ஆண்டு, தீபத்தன்று அதிகாலை பரணி தீபம் முடிந்த பின், பொது தரிசனத்திற்கு திருமஞ்சன கோபுரத்தின் அருகில் காத்திருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், இந்த ஆண்டு போலீசார், ஹிந்து அறநிலையத் துறையுடன் இணைந்து விரைவான முன்னேற்பாடுகள் செய்ததால், பொது தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள், பரணி தீபம் முடிந்து, காலை 5:30 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு, அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், திருவண்ணாமலை நகரின் வீதிகளில் புதியதாக நடைபாதை கடைகள், போலி சாமியார்கள் பிச்சை எடுப்பது, திருநங்கையரில் சிலர் ஆசிர்வாதம் என்ற பெயரில் பக்தர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது போன்ற குற்றச் சம்பவங்களை போலீசார் கண்காணித்ததால், பக்தர்கள் இடையூறு ஏற்படாமல் கிரிவலம் சென்றனர்.
கோவிலின் ஒன்றாம் பிரகாரத்திலிருந்து கொடி மரம் வழியாக சுவாமிகளை எடுத்து வந்து காட்சி மண்டபத்தில் வைப்பதற்கும், ஆண்டிற்கு ஒருமுறை காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் சுவாமியை எடுத்து வருவதற்கும் வசதியாக, கொடி மரத்தின் எதிரே குறிப்பிட்ட அளவு இடம் விடப்பட்டிருந்தது.
அந்த இடத்தில், 3 அடி உயரமுள்ள ஜன்னல் தடுப்பான்களை பயன்படுத்தி வெற்றிடமாக வைத்திருந்ததால், பக்தர்கள் சுவாமிகளை பார்ப்பதற்கு வசதியாக அமைந்தது.
கடந்த டிச., 1ல் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலை ஏற அரசு தடை விதித்தது.
இதனால், மலையைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு, அரசின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கவில்லை.
தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் குழந்தைகளின் கைகளில், அவர்களின் விபரங்கள் அடங்கிய மணிக்கட்டு பட்டைகள் கட்டப்பட்டதால், அவ்வப்போது காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- நமது நிருபர் -