/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
லாரியில் ரூ.50 லட்சம் கொள்ளை: கும்பல் கைது
/
லாரியில் ரூ.50 லட்சம் கொள்ளை: கும்பல் கைது
ADDED : ஆக 19, 2024 07:02 AM
திருச்சி: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரி ரமணி, நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளை வாங்கி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மார்க்கெட்டுக்கு லாரியில் அனுப்பி வருகிறார். இவரது லாரியில் டிரைவர் ஆனந்த், கணக்காளர் லோகேஸ்வரன் ஆகியோர், கும்பகோணம் மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கி விட்டு, லாரியில், 50 லட்சம் ரூபாய் மற்றும் வைக்கோல் ஏற்றிக் கொண்டு ஒட்டன்சத்திரம் திரும்பி கொண்டிருந்தனர்.
கடந்த 3ம் தேதி, திருச்சி- - கரூர் சாலையில், பெட்டவாய்த்தலை அருகே, காவல்காரன் பாளையம் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு, இருவரும் சாப்பிட்ட போது, மர்ம நபர்கள் லாரி லாக்கரில் இருந்த, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
லோகேஸ்வரன் புகார்படி, பெட்டவாய்த்தலை தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடினர். திருச்சி மாவட்டம், நவலுார் குட்டப்பட்டு பகுதியில், கொள்ளை கும்பல் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவர்கள், துாத்துக்குடியைச் சேர்ந்த பிரவீன்குமார், 25; இசக்கிமுத்து, 25; நெல்லையைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி, 22; முத்துமணிகண்டன், 25 மற்றும் மதுரையைச் சேர்ந்த சூர்யா, 27, ஆகியோரை கைது செய்தனர்.
தப்ப முயன்ற வெள்ளைபாண்டி, சூர்யா, இசக்கிமுத்து ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலிடம், 26 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

