/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாணவியிடம் பலாத்கார முயற்சி என்.ஐ.டி., எலக்ட்ரீஷியன் கைது திருச்சியில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம்
/
மாணவியிடம் பலாத்கார முயற்சி என்.ஐ.டி., எலக்ட்ரீஷியன் கைது திருச்சியில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம்
மாணவியிடம் பலாத்கார முயற்சி என்.ஐ.டி., எலக்ட்ரீஷியன் கைது திருச்சியில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம்
மாணவியிடம் பலாத்கார முயற்சி என்.ஐ.டி., எலக்ட்ரீஷியன் கைது திருச்சியில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம்
ADDED : ஆக 30, 2024 10:44 PM

திருச்சி:திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கழகம் உள்ளது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப படிப்பில், நாடு முழுதும் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை, கல்லுாரி மாணவியர் விடுதியில், வைபை சேவை குறைபாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய, என்.ஐ.டி.,யின் தற்காலிக ஊழியரான, ராமநாதபுரம், முதுகளத்துாரைச் சேர்ந்த கதிரேசன், 38, விடுதிக்கு சென்றார்.
மன்னிப்பு
வார்டனிடம் சொல்லாமல், பெண் பாதுகாவலரையும் உடன் அழைத்துச் செல்லாமல் சென்ற அவர், அங்கு இறுதியாண்டு படிக்கும் மாணவி அறைக்குள் நுழைந்து, துாங்கிக் கொண்டிருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
விழித்துக் கொண்ட மாணவி, அறையை விட்டு வெளியே ஓடி வந்து, அங்கிருந்த சக மாணவியரிடம் கூறினார்.
விடுதி வார்டன் மற்றும் கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கல்லுாரிக்கு வந்த பெற்றோர், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் மாலை கதிரேசனை கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவியின் ஆபாச உடையால் தான், இந்த சம்பவம் நடந்ததாக, விடுதி வார்டன் பேபி உள்ளிட்ட வார்டன்கள், மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் நேற்று முன்தினம் இரவு, என்.ஐ.டி., மாணவ - மாணவியரிடம் பரவியது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 கல்லுாரி விடுதி முன், 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், கல்லுாரி இயக்குனர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு, விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லுாரி நிர்வாகம் மற்றும் திருவெறும்பூர் போலீசார் பேச்சு நடத்தினர்.
அப்போது மாணவர்கள் தரப்பில், விடுதி வார்டன்களின் பேச்சு உள்ளிட்ட பிரச்னைகள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து, வார்டன்கள் மூன்று பேரும், தங்கள் பேச்சுக்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டனர். நேற்று காலை, 6:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
பரபரப்பு
சிறிது நேரத்தில், மீண்டும் மாணவர்கள் மறியல் செய்யப்போவதாக, கல்லுாரியில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். திருச்சி எஸ்.பி., வருண்குமார், மாணவர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லுாரி நிர்வாகம் எவ்வித நடவடிகையும் எடுக்காது என்றும் உறுதி அளித்தார். அதன்படி, மாணவர்கள், காலை, 10:00 மணிக்கு, போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.
முன்னதாக, கல்லுாரி மாணவிக்கு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள நிர்வாகம், இனி இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்; மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என, அறிக்கையில் கூறியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரியில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.