/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பஸ் இருக்கை கழன்று ரோட்டில் விழுந்ததில் கண்டக்டர் படுகாயம்
/
பஸ் இருக்கை கழன்று ரோட்டில் விழுந்ததில் கண்டக்டர் படுகாயம்
பஸ் இருக்கை கழன்று ரோட்டில் விழுந்ததில் கண்டக்டர் படுகாயம்
பஸ் இருக்கை கழன்று ரோட்டில் விழுந்ததில் கண்டக்டர் படுகாயம்
ADDED : ஏப் 25, 2024 02:25 AM
திருச்சி,:திருச்சி, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முன்தினம், தீரன் நகர் டெப்போவை சேர்ந்த அரசு டவுன் பஸ், கே.கே.நகர் நோக்கிச் சென்றது. பஸ் பணியில் டிரைவர் பாஸ்கர் மற்றும் கண்டக்டர் முருகேசன், 54, இருந்தனர். பயணியர் இருக்கையில் கண்டக்டர் உட்கார்ந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்த பஸ், கலையரங்கம் சாலையில் சென்று வலது பக்கம் திரும்பிய போது, கண்டக்டர் உட்கார்ந்த இருக்கை திடீரென கழன்று, படிக்கட்டு வழியாக வெளியே விழுந்தது.
பயணியர் சத்தம் போட்டதும், பஸ்சை நிறுத்திய டிரைவர், படுகாயமடைந்த கண்டக்டரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினார். தொடர்ந்து, பஸ்சில் இருந்த பயணியர் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கண்டமான பஸ்சா?
போக்குவரத்து விதிமுறைப்படி, பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பஸ் போன்ற வாகனங்கள் ஒன்பது ஆண்டுகள் இயக்கப்பட்டு விட்டாலோ, 12 லட்சம் கி.மீ., துாரம் இயக்கப்பட்டு இருந்தாலோ, கண்டமான வாகனமாக கருதப்படும்.
தற்போது, இருக்கை கழன்று விழுந்த பஸ், 2011ம் ஆண்டு மே மாதத்தில் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த பஸ் கண்டமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
கண்டமான, அரசு பஸ்களை கணக்கெடுத்து, போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

