/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஸ்ரீரங்கம் கோவிலில் இடிந்த கோபுரம் சீரமைப்பு துவக்கம்
/
ஸ்ரீரங்கம் கோவிலில் இடிந்த கோபுரம் சீரமைப்பு துவக்கம்
ஸ்ரீரங்கம் கோவிலில் இடிந்த கோபுரம் சீரமைப்பு துவக்கம்
ஸ்ரீரங்கம் கோவிலில் இடிந்த கோபுரம் சீரமைப்பு துவக்கம்
ADDED : மே 03, 2024 09:41 PM

திருச்சி:பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், வெள்ளை கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம் உள்ளிட்ட பெரிய கோபுரங்களும், தாயார் மற்றும் உடையவர் சன்னிதி உட்பட சிறிய கோபுரங்கள் என, 21 கோபுரங்கள் உள்ளன.
ஏற்கனவே, கோவிலில், தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தில் முதல் மற்றும் இரண்டாவது மாடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. சிதிலமடைந்த கோபுரத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக, 67 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு ஆக., 4ம் தேதி நள்ளிரவில், கோபுரத்தில் உள்ள முதல் மாடத்தின் பூச்சு மற்றும் சுதை சிற்பங்கள் இடிந்து விழுந்தன. ஸ்ரீரங்கம் கோவிலில், தாமோதர கிருஷ்ணன் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இடிந்த கோபுர சுவர் மற்றும் சுதை சிற்பங்கள், சிற்ப சாஸ்திர வல்லுநர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட வல்லுநர் குழு வழிகாட்டுதல்படி, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி துவங்கி உள்ளது.
கோயம்புத்துாரை சேர்ந்த ஜெயபால் என்ற நன்கொடையாளர் உதவியுடன், 1.75 கோடி ரூபாய் செலவில், முதல் மற்றும் இரண்டாம் மாடங்களில் இலுப்பை மரத்தாலான உத்திரங்கள் பொருத்தி, சுதை சிற்பங்கள் மற்றும் கொடுங்கைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.
இந்த பணியை, ஒன்றரை ஆண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.