/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கணவர் உடலை பெற 2 மனைவிகள் போட்டி
/
கணவர் உடலை பெற 2 மனைவிகள் போட்டி
ADDED : பிப் 01, 2024 02:34 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள காவல்காரபாளையத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி, 65. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். இரண்டாவது மனைவி பூங்கொடி, ஒரு மகள் உள்ளார். கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், முதல் மனைவியின் மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த நாராயணசாமி, சிறுகமணியில் உள்ள 2வது மனைவி வீட்டில் தங்கினார்.
அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவரது உடலை பெற்று இறுதி சடங்கு செய்ய, முதல் மனைவி முயற்சித்தார். ஆனால், இரண்டாவது மனைவியோ, 'நான் தான் அடக்கம் செய்வேன்' என்று விடாப்பிடியாக இருந்தார்.
தகவலறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் உடலை கைப்பற்றி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் போலீசாரும், வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி, நேற்று, முதல் மனைவியிடம் நாராயணசாமி உடலை ஒப்படைத்தனர்.