/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பட்டா வழங்க ரூ.7,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
/
பட்டா வழங்க ரூ.7,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
ADDED : ஜன 24, 2024 01:32 AM
வளநாடு:திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள வேம்பனுாரைச் சேர்ந்தவர் கருப்பன், 48. தன் நிலத்துக்கு பட்டா கேட்டு, கடந்த ஆண்டு, செப்., மாதம் விண்ணப்பித்தார்; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் ஜனவரியில் விண்ணப்பித்து, வேம்பனுார் வி.ஏ.ஓ. சோலைராஜ், 27, என்பவரை சந்தித்து கேட்டார். அப்போது, பட்டா வழங்க அவர் 10,000 ரூபாய் லஞ்சமாக தருமாறு கூறினார்; பின், 7,000 ரூபாய் தருவதாக முடிவு செய்யப்பட்டது.
எனினும், லஞ்சம் தர விரும்பாத கருப்பன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். போலீசார் ஆலோசனை படி, நேற்று காலை வேம்பனுார் அலுவலகத்தில் வி.ஏ.ஓ. சோலைராஜுடம் கருப்பன் 7,000 ரூபாயை கொடுத்தார்.
அதை வாங்கிய அவர், கிராம பஞ்., தற்காலிக உதவியாளர் பாஸ்கரன், 43, என்பவரிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

