/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு அவசிய தேவை
/
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு அவசிய தேவை
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு அவசிய தேவை
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு அவசிய தேவை
ADDED : நவ 12, 2024 12:26 AM

திருச்சி: திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இதய நோய் பிரிவில், அறுவை சிகிச்சை வசதி இல்லாததால், மக்கள் தஞ்சாவூர், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், பல நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எத்தனையோ சிறப்பான துறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருந்தாலும், இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான ரேடியோதெரபி, கீமோதெரபி, புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை வசதிகள் இல்லை. இதனால், நோயாளிகள் தஞ்சாவூர், மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது:
கடந்த 2015ம் ஆண்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான, 'ரேடியோதெரபி' சிகிச்சை துவங்க அரசாணை வெளியிடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கான, 'ஆன்காலஜி' சிகிச்சைக்காக, பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 64 பேர் நியமிக்கப்பட வேண்டும்.
அதேபோல, இதய சிகிச்சை துறையில், 'கேத் லேப்' வசதி இங்கு இருப்பதால், இதய அடைப்புக்கான ஆஞ்சியோ பரிசோதனை, ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதய ரத்த குழாய்களில் அதிக எண்ணிக்கையிலான அடைப்பு இருந்தால் செய்யப்படும், 'ஓபன் ஹார்ட்' அறுவை சிகிச்சை துறை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லை. இதற்கு, 'கார்டியோ தொராசிக்' சிகிச்சை நிபுணர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
சில மாதங்களுக்கு முன், திருச்சி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'திருச்சியில் புற்றுநோய் மற்றும் இதய அறுவை சிகிச்சை பிரிவு விரைவில் துவங்கப்படும்' என்றார். எனினும், இன்னும் துவங்கப்படவில்லை.
புற்றுநோய்க்கு தஞ்சாவூரில் கதிர்வீச்சு சிகிச்சை பெறும் புத்துாரை சேர்ந்த தேவன் என்பவர் கூறியது:
தஞ்சாவூரில் இதற்கான சிகிச்சை வழங்கப்படுவதால் அங்கு தினமும் சென்று, கதிர்வீச்சு சிகிச்சை பெறுகிறேன். திருச்சியில் இந்த சிகிச்சை வசதி இருந்தால், ஏழை நோயாளிகளுக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.