/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கைதியை தாக்கிய விவகாரம்: 23 போலீசார் மீது வழக்கு
/
கைதியை தாக்கிய விவகாரம்: 23 போலீசார் மீது வழக்கு
ADDED : ஆக 11, 2025 02:37 AM
திருச்சி:திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில், துணை ஜெயிலர் உட்பட, 23 சிறைத்துறையினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர், மதுரையைச் சேர்ந்த ஹரிஹரசுதன். ஐ.டி.ஐ., படிப்புக்காக, மதுரை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறையில் ஏற்பட்ட தகராறில், கடந்த மாதம் ஹரிஹரசுதனை, திருச்சி மத்திய சிறை துணை ஜெயிலர் மணிகண்டன் உள்ளிட்ட சிறைக்காவலர்கள் தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த ஹரிஹரசுதனை சந்திக்க, அவரது குடும்பத்தார் மற்றும் வக்கீல் களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஹரிஹரசுதன் தாய், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிமன்றம், ஹரிஹரசுதனை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த திருச்சி மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, திருச்சி மத்திய சிறை துணை ஜெயிலர் மணிகண்டன், ஏட்டு அருண்குமார் உட்பட, 23 சிறைத்துறையினர் மீது, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.