/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
செம்மண் கொள்ளை தி.மு.க., செயலர் மீது புகார்
/
செம்மண் கொள்ளை தி.மு.க., செயலர் மீது புகார்
ADDED : பிப் 12, 2025 01:17 AM
திருச்சி:மணப்பாறையில் மொண்டிப்பட்டி, பெரியபட்டி உட்பட கிராம விளைநிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மண்ணை, தி.மு.க., ஒன்றிய செயலர் கொள்ளையடித்து இருப்பதாக, விவசாய சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்களும், விவசாய சங்கத்தினரும் குறைதீர் கூட்டம், கனிம வளத்துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு, ஆறு மாதங்களாக மனு அளித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை கூறியதாவது:
தி.மு.க., ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமி, மணப்பாறை கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை மிரட்டி, விளைநிலங்களை விலைக்கு வாங்கி உள்ளார். அந்நிலத்தில், செம்மண்ணை, பொக்லைனால் 2 அடி ஆழத்துக்கு தோண்டி, டிப்பர் லாரிகளில் மண்ணை கடத்தி வருகிறார்.
இதனால் மற்ற விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நேரு, மகேஷ் ஆகியோரின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அரசு அதிகாரிகளையும், போலீசாரையும் மிரட்டி, சில மாதங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மண்ணை கொள்ளையடித்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தால், புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலிக்கு நேர்ந்த நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மணப்பாறையில் நடைபெறும் செம்மண் கொள்ளையை, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

