/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பூதநாயகி அம்மன் கோவிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை
/
பூதநாயகி அம்மன் கோவிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை
ADDED : ஆக 06, 2011 02:25 AM
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் இந்து முன்னணி நடத்தும் 11ம் ஆண்டு 1,008 குத்துவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட பொதுசெயலாளர் பழனிச்சாமி, மருங்காபுரி ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், துவரங்குறிச்சி நகர செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். திருச்சி புறநகர் மாவட்ட பொறுப்பாளர் வடிவேல் வரவேற்றார். இதில், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் பங்கேற்று பேசியதாவது: திருவிளக்கு பூஜை செய்யும்போது, அதன் மேல்பகுதியில் சிவபெருமானும், ஐந்து முகங்களிலும் பிரம்மாவும், தண்டு பகுதியில் சக்தியும், கீழ் பகுதியில் அனைத்து தெய்வங்களும் இருப்பதாக ஐதீகம் ஆகும். திருவிளக்கு வைத்து பூஜை செய்தால் அந்த குடும்பத்திற்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும். வீட்டை வளப்படுத்த பெண்களால் தான் முடியும். மொபைல்ஃபோன், இன்டர்நெட், 'டிவி' போன்றவை நம்முடைய கலாசாரத்திற்கு சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் 'டிவி'யில் வரும் நெடும் தொடர்களை பார்க்க கூடாது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் ஆன்மிகத்தை ஊட்ட வேண்டும். அந்தந்த பகுதியில் நடக்கும் திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தாஸ், ஸ்ரீராம் மற்றும் ஏராளமான இந்து முன்னணியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். சேவா பாரதி அமைப்பை சேர்ந்த ப்ரீத்தா, லதா, சேவிகா சமதி அமைப்பை சேர்ந்த ஆனந்தி ஆகியோர் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர். இதில், துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனின் அருட் பிரசாதம் பெற்றுச் சென்றனர். இந்து முன்னணி நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.