/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு காத்திருந்த விவசாயிகள் கண்ணீருடன் முறையீடு
/
நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு காத்திருந்த விவசாயிகள் கண்ணீருடன் முறையீடு
நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு காத்திருந்த விவசாயிகள் கண்ணீருடன் முறையீடு
நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு காத்திருந்த விவசாயிகள் கண்ணீருடன் முறையீடு
ADDED : அக் 27, 2025 12:48 AM

திருச்சி: தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து, பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஆய்வு செய்த மத்திய குழுவிடம், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் செய்யவும், ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில், குறுவை அறுவடை துவங்கியதால், செப்டம்பர் முதல், நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், அறுவடை செய்து, கொள்முதலுக்கு வைத்துள்ள குறுவை நெல்லும், வயலில் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்களும் மழையில் நனைந்து வீணாகின.
மத்திய அரசு, நெல் கொள்முதலில், அதிகபட்ச ஈரப்பதம், 17 சதவீதம் என நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில், கொள்முதல் நிலையங்களில், நெல்லின் ஈரப்பதத்தை அதிகபட்சம், 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழக அரசும், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசு சார்பில், உணவு பொருள் இருப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர்கள் ஆர்.கே.சாஹி, பி.கே.சிங் மற்றும் உதவி இயக்குநர் பிரீத்தி ஆகியோர் தலைமையில், தொழில்நுட்ப அலுவலர்கள் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.
மத்திய உணவுத்துறை துணை இயக்குநர் ஆர்.கே.ஷாகி தலைமையில், தொழில்நுட்ப வல்லுநர்களான ராகுல் சர்மா, தனுஜ் சர்மா ஆகியோர் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.
திருச்சி மாவட்டம், வாளாடி வேலாயுதபுரம், நகர், பூவாளூர், கோமாக்குடி போன்ற இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அதே போல், மழையால் நெற்பயிர்கள் பாதித்த இடங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
தஞ்சாவூர் பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர், தஞ்சாவூர் அருகே ஆலக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் ஈரப்பதம் தொடர்பாக நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கிருந்த நெல் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு, விவசாயிகளின் விபரங்களையும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், ''மத்திய குழுவினரிடம், 22 சதவீதம் வரை ஈரப்பதத்தை உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது. நெல் மாதிரிகள் சேகரித்துள்ள குழுவினர், இரண்டு வாரத்தில் அறிக்கை தருவதாக கூறியுள்ளனர்.
''நெல்லில் தற்போது 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளது. கொள்முதல் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதித்த பயிர்கள் குறித்து கணக்கீடு செய்ய, வெளிமாவட்ட வேளாண் அதிகாரிகள் வர உள்ளனர் ,'' என்றனர்.
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மத்திய உணவுத்துறை உதவி இயக்குநர் பிரீத்தி தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நெல் குவியலை அள்ளி, கருவியில் வைத்து ஈரப்பதத்தின் சதவீதத்தை சோதனை செய்தனர். ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக, சிறிய பாக்கெட்டுகளிலும் சேகரித்து கொண்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறுகையில், ''மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பர். அதன்படி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

