/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மொபைல் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்
/
மொபைல் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 14, 2024 02:21 AM

திருச்சி:விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும்; கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர், திருச்சி தலைமை தபால் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயன்ற போது, விவசாயிகள் அரை நிர்வாண உடையுடன், கையில் மண்டை ஓட்டுடனும், சாலையில் அங்கும் இங்கும் ஓடி மறியலில் ஈடுபட்டனர்; அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
அந்த நேரத்தில், நான்கு விவசாயிகள் தபால் நிலையம் அருகே உள்ள தனியார் மொபைல் போன் டவரில் ஏறி நின்று கொண்டு, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, அரைமணி நேரம் போராட்டத்துக்கு பின், அவர்களை கீழே இறக்கினர்.
பின் அங்கேயே விவசாயிகள் சாலையோரம் அமர்ந்து, தங்கள் கோரிக்கையை கோஷங்கள் மூலம் எழுப்பி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் பள்ளியில் தங்க வைத்தனர்.
மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

