/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலீசாரை மிரட்டிய ஜாதி அமைப்பின் தலைவர் கைது
/
போலீசாரை மிரட்டிய ஜாதி அமைப்பின் தலைவர் கைது
ADDED : அக் 17, 2024 09:56 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடியில், இரு நாட்களுக்கு முன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கார், சோதனை சாவடியில் நிற்காமல், போலீசாரின் தடுப்புகளை இடித்து விட்டு வேகமாகச் சென்றது. உடனே காரை மடக்கிப் பிடித்தனர் போலீசார். அப்போது, காரில் இருந்தவர்கள், அரிவாளை காட்டி, போலீசாரை மிரட்டினர். பின், அங்கிருந்து தப்பினர்.
தொடர்ந்து அந்த காரை விரட்டிச் சென்ற பெட்டவாய்த்தலை போலீசார், நேற்று முன்தினம் இரவு, பரமக்குடி அருகே கார் நிற்பதை அறிந்தனர். காரில் இருந்த, ஐவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், தேவேந்திர குல மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் குமுளி ராஜ்குமார் இருந்தது தெரியவந்தது. அவர் தான், ஏற்கனவே காரில் இருந்தபடியே போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டினார் என்பதையும் அறிந்தனர். மற்றவர்கள், தேவேந்திர குல மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் பயணம் செய்த காரில் இருந்த, 25 நாட்டு வெடிகுண்டுகள், இரு நாட்டு துப்பாக்கிகள், அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த கைது நடவடிக்கைக்கு அவ்வியக்கத்தைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.