/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இளம்பெண்ணிடம் மோசடி ; கட்சி நிர்வாகிகள் கைது
/
இளம்பெண்ணிடம் மோசடி ; கட்சி நிர்வாகிகள் கைது
ADDED : மார் 21, 2025 11:40 PM

திருச்சி; இளம் விதவையிடம் பணத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய், 15 சவரன் நகைகளை வாங்கி மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த, அ.தி.மு.க., -- மூ.மு.க., மாவட்ட நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள 'பெல்' நிறுவனத்தில் செக்யூரிட்டி எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் செல்வகுமார். இவரது மனைவி ரேகா; செல்வகுமார் 2017ல் இறந்து விட்டார். இவருக்கான செட்டில்மென்ட் பணத்தை, ரேகா, வங்கியில் வைத்திருந்தார்.
இதையறிந்து ரேகாவை அணுகிய, அ.தி.மு.க., திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கலைப்பிரிவு செயலர், வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்த ராஜா, 39, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகி, பெல் நகர் சமுத்திர பிரகாஷ், 39, ஆகியோர், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் வாங்கினர்.
மேலும், 15 சவரன் நகையையும் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை.
பணத்தைக் கேட்ட ரேகாவை, இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து, கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் ரேகா புகார் அளித்தார்.
துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து, அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி ராஜா, மூ.மு.க., மாவட்ட நிர்வாகி சமுத்திர பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.