/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வணிகர்களுக்காக சமாதானத் திட்டம் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
/
வணிகர்களுக்காக சமாதானத் திட்டம் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
வணிகர்களுக்காக சமாதானத் திட்டம் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
வணிகர்களுக்காக சமாதானத் திட்டம் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
ADDED : டிச 18, 2024 02:59 AM
திருச்சி:'வணிகர்களுக்காக, சமாதான திட்டம் கொண்டு வர வேண்டும்,' என்று பேரமைப்பு மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜு வரவேற்றார்.
கூட்டத்தில், வணிகர்களின் தற்போதைய நிலைபாடுகள், அரசின் சட்டங்களால் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகள், வணிக நிலைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வணிகர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வருங்கால வைப்பு நிதி, குடும்பநல நிதி, ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன், சட்ட முன்வடிவுகளை கொண்டு வரும் போதும், வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரும் போதும், வணிகர் சங்க அமைப்பின் நிர்வாக பிரதிநிதிகளை அழைத்து, கலந்தாய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட 2017ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு வரை தாக்கல் செய்த கணக்குகளில் உள்ள குறைபாடுகளுக்காக, மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வணிகர்களை சிரமப்படுத்தாமல், சமாதானத் திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும்.
ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி, வணிகர்களுக்கான உரிமக் கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு, குப்பைவரி, குப்பைக்கான அபராதக் கட்டணங்களை விலக்கிக் கொள்ள வேண்டும்.
வாடகை மீதான 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், 2025ம் ஆண்டு மார்ச் மாதம் டில்லியில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட அறிவிப்பை செயல்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழில் துறையினர் மற்றும் வணிகர்கள் எதிர்கொள்ளும் அதிகார அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர, வணிக-தொழில் அதிகார ஆய்வுக்குழு உருவாக்க வேண்டும், என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.