/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரூ.9.48 கோடி செலுத்த வேண்டும் : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்
/
ரூ.9.48 கோடி செலுத்த வேண்டும் : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்
ரூ.9.48 கோடி செலுத்த வேண்டும் : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்
ரூ.9.48 கோடி செலுத்த வேண்டும் : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்
ADDED : நவ 27, 2025 11:48 PM
திருச்சி: திருச்சியைச் சேர்ந்த பெண்ணின் ஆதார் மற்றும் பான் கார்டை பயன்படுத்தி துவக்கிய போலி நிறுவனத்துக்கு, 9.48 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., செலுத்த, அந்த பெண்ணை வங்கி நிர்வாகம் வலியுறுத்துவதால், சைபர் கிரைம் போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
திருச்சி, மன்னார்புரம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி, 45. கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசிக்கும் இவருக்கு, சிம்கோ மீட்டர் காலனியில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த வங்கி கணக்கு, சில நாட்களுக்கு முன் முடக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறிந்த அவர் வங்கியில் விசாரித்த போது, அவரின் பெயரில் உள்ள நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி.,யாக அரசுக்கு, 9.48 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்பதால், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர், வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
அவரின் வங்கி கணக்கை முழுமையாக ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், அவரின் ஆதார், பான் கார்டு எண்ணை பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்துாரில், டி.வி.எல்.எஸ்.பி., என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, தன் ஆவணங்களை பயன்படுத்தி, நிறுவனம் துவக்கி, 9.48 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., செலுத்த வலியுறுத்துவது குறித்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் சைபர் கிரைம் போலீசில், கலைவாணி நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து, கலைவாணி கூறும் போது, ''நான் சாதாரண குடும்பத்து பெண். என் ஆதார், பான்கார்டுகளை பயன்படுத்தி நிறுவனம் துவக்கி, 9.48 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது.
''இப்போது என் கணக்கில், 3,500 ரூபாய் உள்ளது. அதை செலவுக்கு கூட எடுக்க முடியவில்லை,'' என்றார்.

