/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஸ்ரீரங்கம் கோவிலில் வைஜெயந்திமாலா தரிசனம்
/
ஸ்ரீரங்கம் கோவிலில் வைஜெயந்திமாலா தரிசனம்
ADDED : மார் 18, 2025 06:30 AM

திருச்சி : நடிகையும் முன்னாள் எம்.பி.,யுமான வைஜெயந்தி மாலா ஸ்ரீரங்கம் கோவிலில், நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
நடிகையும், நடன கலைஞரும், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் எம்.பி.,யாக இருந்த வைஜயந்திமாலா பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
நேற்று, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்து தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்த 91 வயதான வைஜெயந்திமாலா, மூலஸ்தானத்திற்கு நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது 13 வயதில் பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்தேன். பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற கலைஞராக என் பாட்டி மிகவும் உறுதுணையாக இருந்தார்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தது மிக பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இறைவன் அருளால், அயோத்தியில் எனது நாட்டியாஞ்சலி சேவை நடந்தது. அதன் மூலம் தெய்வீகமான அனுபவம் கிடைத்தது.
தெய்வ அருள் தான் என்னை முழுமையாக காப்பாற்றி உள்ளது. என்னுடைய கலை பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு முடிவு எப்போது? என்று கூறமுடியாது, இது தான் கடைசி என்று நான் சொல்லப் போவதில்லை.
இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும்; பெயர், புகழ் கிடைக்கும். சினிமாவில் இருந்து விலகி பல நாட்களாகி விட்டது. தஞ்சையில் நாட்டியாஞ்சலி செய்ததன் மூலம் நல்ல பெயரும், புகழும் கிடைத்தது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.