ADDED : டிச 09, 2025 12:18 AM

சென்னை: சென்னையில் வரும் 11ல், ஆர்.எஸ்.எஸ்., விஜில் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார்.
'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவை, மத்திய அரசு கொண்டாடி வருகிறது. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள், நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.எஸ்.,சின் பொது விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பான, 'விஜில்' சார்பில், சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், வரும் 11ம் தேதி, 'பாரதி பிறந்த தினம் மற்றும் வந்தே மாதரம் 150வது ஆண்டு தினம்' விழா நடக்கிறது.
'பாரதி கண்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம்:- தமிழ் இளைஞர்களின் பார்வைக்கு' என்ற தலைப்பில் நடக்கும் இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரபாரதி ஆகியோர் பேசுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு எதிராக, சீமான் பேசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ்., விஜில் அமைப்பு நடத்தும் வந்தே மாதரம் விழாவில், சீமான் பங்கேற்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, 'விஜில்' அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:
'விஜில்' அமைப்பு, கடந்த 1981 முதல் செயல்படுகிறது. எதிர் சித்தாந்தம், எதிர் கருத்து கொண்டவர்களையும் அழைத்து, கருத்து பரிமாற்றம் நிகழ்த்துவதுதான், இந்த அமைப்பின் நோக்கம். கடந்த காலங்களில், 'விஜில்' நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த அடிப்படையில்தான், சீமானும் கலந்து கொள்கிறார். தமிழையும், தேசியத்தையும் இரு கண்களாக போற்றியவர் பாரதி. அதன்படி, 'பாரதி கண்ட வந்தே மாதரம்' என்ற தலைப்பில், சீமான் பேசுகிறார். மாற்றுக் கருத்துடையோர் யாராக இருந்தாலும், இது மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்களும் கலந்து கொள்ளலாம்.

