ரூ. 1,020 கோடி ஊழல் புகாரில் தமிழக அரசுக்கு நெருக்கடி!
ரூ. 1,020 கோடி ஊழல் புகாரில் தமிழக அரசுக்கு நெருக்கடி!
UPDATED : டிச 09, 2025 12:04 AM
ADDED : டிச 08, 2025 11:53 PM

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 1,020 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை மீண்டும் புகார் கூறியுள்ளதால், தி.மு.க., அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த துறையின் அமைச்சர் நேருவுக்கு எதிராக, அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பியுள்ளன. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த நேரு உள்ளார். இவரது தம்பி ரவிசந்திரன், 30 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிந்தனர்.
பறிமுதல்
இவ்வழக்கு தொடர்பாக, கடந்த ஏப்ரலில் சென்னை, திருச்சி மற்றும் கோவையில், ரவிசந்திரன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, நேரு அமைச் சராக உள்ள நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான, 'டிஜிட்டல்' ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அவற்றை ஆய்வு செய்து, 'பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனத்திற்கு, அவர்களின் பதவியை பொறுத்து, நபர் ஒருவருக்கு, 25 --- 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு உள்ளது.
'அந்த வகையில், 888 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது' என, 232 பக்க ஆதாரங்களுடன், கடந்த அக்டோபரில் தமிழக டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத் துறையினர் கடிதம் அனுப்பினர்.
அதில், அமைச்சர் 'நேரு தொடர்பான ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், எங்களால் சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்ய முடியும்' என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், ரவிசந்திரன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் பறிமுதல் செய்த கூடுதல் ஆவணங்களை ஆய்வு செய்து, அமைச்சர் நேரு துறையில் மேலும் ஒரு ஊழல் நடந்து இருப்பதை கண்டறிந்து, தமிழக தலைமை செயலர் முருகானந்தம், டி.ஜி.பி., வெங்கடராமன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அபய்குமார் சிங் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.
அத்துடன், ஊழல் தொடர்பான 258 பக்க ஆவணங்களையும் அனுப்பி உள்ளனர்.
திட்டங்கள்
அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டடம் கட்டுதல், கழிப்பறைகள் அமைத்தல், 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்களை நியமனம் செய்தல், 'நபார்டு' வங்கி திட்டங்கள், துாய்மை பணியாளர்கள் நியமனத்திற்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்கான, 'டெண்டர்'கள் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது.
டெண்டர்களை இறுதி செய்வதற்கு முன்பே யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5 - 10 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டு உள்ளது.
அந்த வகையில், 1,020 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருப்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. லஞ்சமாக பெறப்பட்ட பணப் பரிவர்த்தனைகள், வெளிநாடுகளிலும், ஹவாலா வாயிலாகவும் நடந்துள்ளன.
இது தொடர்பாக, நேருவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் 'பினாமி'களின் மொபைல் போன், 'வாட்ஸாப்' தகவல்கள், புகைப்படங்கள் என, டிஜிட்டல் ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களை, உங்களின் பார்வைக்கு அனுப்பி உள்ளோம். மேலும், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து, அரசு அதிகாரிகள், ஒவ்வொரு டெண்டருக்கும் 20 - 25 சதவீதம் வரை லஞ்சம் வசூலித்துள்ளனர். கட்சி நிதி என்ற பெயரிலும் வசூல் வேட்டை நடத்தி உள்ளனர்.
லஞ்ச பணப் பரிமாற்றம் தொடர்பாக, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயனிடம் இருந்து, நேருவின் நெருங்கிய உறவினர்களின் மொபைல் போன்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இதற்கான ஆவணங்களையும் உங்களுக்கு அனுப்பி உள்ளோம். அதன் அடிப்படையில், இந்த ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
விஜய் மதன்லால் சவுத்ரி என்பவரின் வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அடிப்படையில், ஊழல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்ய தவறினால், அவர்களும் ஊழல் செய்தவர்களுக்கு உதவிய நபர்களாக கருதப்படுவர்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், அமைச்சர் நேருக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதியுள்ள இரண்டாவது ஊழல் குற்றச்சாட்டு கடிதம் இது.
இவ்விவகாரத்தை விடாமல் அமலாக்கத்துறை விசாரித்து வருவதாலும், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளதாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க., அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
'அமலாக்கத்துறையை ஏவி விட்டு அரசியல் செய்யும் அ.தி.மு.க., - பா.ஜ.,' அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை:கடந்த ஐந்தாண்டில், என் துறையின் கீழ் 24,752 கி.மீ., சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையில் அ.தி.மு.க., ஆட்சியில் சாலைகளும், சுரங்கப்பாதைகளும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சி அளித்ததை அனைவரும் அறிவர். இன்று, சென்னையில் உள்ள 'சப்வே'க்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கி இருக்கிறோம். சென்னை மாநகராட்சியில் மட்டும், 1,519 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் கால்வாய் பணிகள் செய்யப்பட்டு உள்ளன. சட்டசபை தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கட்சியினரின் துாக்கத்தை, இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன. அதுவே, மத்திய அரசு துாண்டி விடும் அமலாக்கத் துறையின் கண்களுக்கு புகார்களாக தெரிகிறது; அப்பட்டமான அரசியல் செய்ய துாண்டி விடப்படுகிறது. என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

