/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் சாலை மறியல்
/
அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 24, 2024 11:39 PM
திருச்சி,:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருங்களூர் ஊராட்சி, விடத்தாம்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று, பொதுமக்கள், புறத்தாக்குடி கடைவீதியில் மறியல் செய்தனர்.
இது குறித்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
புறத்தாக்குடியில், 15 ஆண்டுகளாக சாலை, மின்விளக்கு, குடிநீர், கழிவு நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
மழை காலங்களில் கிராமத்தில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். உடல் நலம் பாதிப்பவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் வாகனம் கூட வரமுடிவதில்லை.
எனவே, ஊராட்சி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லுார் தாசில்தார் பழநிவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அவர்களுடன் பேச்சு நடத்தினர்.
அடுத்த மாதம் புதிய தார் சாலை அமைத்து தரப்படும். தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும், என்று தாசில்தார் பழனிவேல் உறுதியளித்தார். கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

