/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுாரில் கடத்தப்பட்ட குழந்தை பெங்களூரில் மீட்பு
/
வேலுாரில் கடத்தப்பட்ட குழந்தை பெங்களூரில் மீட்பு
ADDED : ஆக 01, 2024 10:58 PM
வேலுார்:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி சின்னு, 20, கடந்த, 27ல் பிரசவத்திற்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் காலை, சின்னு உணவருந்திக் கொண்டிருந்த போது, குழந்தை அழுதது. அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், 'குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன்; நீ சாப்பிடு' எனக்கூறி குழந்தையை வாங்கினார். சிறிது நேரத்தில் குழந்தையை கடத்தி சென்றார்.
வேலுார் டி.ஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர், 10 வயது சிறுவனுடன் அந்த வார்டில் நடமாடியதும், வார்டில் இரு குழந்தைகளை கொஞ்சியதும், பின், சின்னுவின் குழந்தையை ஒரு பையில் வைத்து, கடத்தியதும் தெரிந்தது.
தொடர் விசாரணையில், அப்பெண், இடையன்சாத்து கிராமத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, 35, என, தெரிந்தது. அங்கு சென்று பெண்ணை பிடித்து விசாரித்ததில், அவர் குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்தவர்களிடம், பல லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றதும், குழந்தை பெங்களூருவுக்கு காரில் கடத்தப்பட்டதும் தெரியவந்தது.
பெங்களூரு விரைந்த போலீசார், நேற்று காலை குழந்தையை மீட்டனர். வைஜெயந்தி மாலாவை கைது செய்து, பெங்களூருவை சேர்ந்த மூன்று பேரிடம் இதற்கு முன் வேறு எங்கெங்கு குழந்தையை கடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.