ADDED : மார் 07, 2025 01:40 AM
வேலுார்:பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறி, பொதுமக்களிடம், 10 நாட்களில், ஆன்லைன் வாயிலாக 1 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில், சில மாதங்களாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. வேலுார் மாவட்டத்தில், ஆன்லைன் வாயிலாக பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி வலை விரித்துள்ளனர்.
அதில், 10,000 ரூபாய் டிபாசிட் செய்தால், நாளொன்றுக்கு, 3,000 முதல், 5,000 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக தெரிவித்து, முதலில், 10,000 ரூபாயை டிபாசிட் செய்ய வைத்து, 3,000 ரூபாய் வழங்கி, பின்னர், லட்சக்கணக்கில் பணம் கட்டியவுடன் இணைப்பை துண்டித்து, மோசடி செய்துள்ளனர்.
இதுபோன்று, 10 நாட்களில் மட்டும், 15க்கும் மேற்பட்டோரிடம், 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளது. புகார்களின் படி, வேலுார் மாவட்ட 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.