ADDED : செப் 13, 2025 02:19 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடியிலிருந்து நேற்று முன்தினம் டில்லி பதிவெண் கொண்ட சொகுசு கார், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தில், எதிரே காவனுாரை சேர்ந்த தொழிலாளி மணி, 65, ஓட்டி வந்த, 'ேஹாண்டா' பைக் மீது மோதியதில், மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆனால், கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், காரை பைக்கில் விரட்டினர். பசுமாத்துார் ரயில்வே பாலம் வழியாக கார் சென்றபோது முன்பக்க டயர் பஞ்சாரானதால், நிலை தடுமாறி விவசாய நிலத்தில் பாய்ந்தது. காரில் இருந்த இருவர் தப்பினர்.
கே.வி.குப்பம் போலீசார் விசாரித்த போது , காரின் பின் இருக்கையில், அரை டன் கடத்தல் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிந்தது. குடியாத்தம் வனத்துறையினர். கே.வி.குப்பம் தாசில்தார் பலராமன் உள்ளிட்டோர் காரையும், செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். காரில் வந்தவர்களை, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.