/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சார் - பதிவாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
/
சார் - பதிவாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
ADDED : பிப் 15, 2024 02:44 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் - பதிவாளராக ரமணன், 55, பணிபுரிகிறார். இவர், 1998ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று சார் - பதிவாளராக பள்ளிகொண்டா, திருப்பத்துார், வேலுார், ஆம்பூர் போன்ற இடங்களில் பணியாற்றினார்.
தொடர்ந்து, கே.வி.குப்பம் சார் - பதிவாளராக 2022ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல், 2021ம் ஆண்டு வரை, ரமணன் தன் பெயரிலும், மனைவி சவுந்தரம் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, வேலுார் விஜிலென்ஸ் போலீசாருக்கு கடந்த 7ம் தேதி புகார் சென்றது.
அதன்படி, விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வருமானத்திற்கு அதிகமாக, 82 சதவீதம் அளவுக்கு, 47.49 லட்சம் ரூபாய்க்கு சொத்து வைத்திருப்பதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, கடந்த 12 மாலை முதல், காட்பாடி மதி நகரிலுள்ள சார் - பதிவாளர் ரமணனின் வீட்டில், வேலுார் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அன்று நள்ளிரவு வரை சோதனையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான வங்கி கணக்கு விபரங்கள், வீட்டுமனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

