/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கணவர் வெட்டிக்கொலை காதலனுடன் மனைவி கைது
/
கணவர் வெட்டிக்கொலை காதலனுடன் மனைவி கைது
ADDED : ஜூலை 23, 2025 02:31 AM
ஒடுகத்துார்:கணவரை வெட்டிக்கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாரத், 36; கேட்டரிங் படித்தவர். தாம்பரத்தில், ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றினார். இவரது மனைவி பெங்களூருவை சேர்ந்த நந்தினி, 30. இவர்களுக்கு, 4, 3 வயதில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பாரத், மனைவி, குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு, தாம்பரத்தில் தங்கி பணியாற்றி வந்தார். விடுமுறையில் குப்பம்பாளையம் வந்து சென்றார்.
இரு நாட்களுக்கு முன் விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் மனைவி மற்றும் இளைய மகளுடன் குருவராஜபாளையத்தில் கடைக்கு சென்று விட்டு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் வீடு திரும்பினார்.
அப்போது, சாலை நடுவே தென்னை மட்டைகள் போட்டு வைத்திருந்தனர். அதை கடந்து வந்த போது தவறி கீழே விழுந்தவரை, அடையாளம் தெரியாத கும்பல், கத்தியால் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
வேப்பங்குப்பம் போலீசார், பாரத் மனைவி நந்தினியிடம் விசாரித்தனர். அப்போது, உடனிருந்த அவரது மகள், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 25, தந்தையை வெட்டியதாக கூறினார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், நந்தினி, சஞ்சய் இடையே கள்ளக்காதல் இருந்ததும், அதற்கு இடையூறாக இருந்த பாரத்தை, இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, வெட்டிக் கொன்றதும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.