/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரூ.16.30 லட்சம் ஹவாலா பணம் கடத்திய வாலிபர் கைது
/
ரூ.16.30 லட்சம் ஹவாலா பணம் கடத்திய வாலிபர் கைது
ADDED : ஜூலை 12, 2025 01:48 AM
வேலுார் :துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, 25 வயது இளம் பெண், பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இவர், வேலுாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க, தன் கணவருடன் பெங்களூருவில் இருந்து வேலுாருக்கு, தனியார் ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். மாதனுார் பகுதியில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. அந்த பெண், அவரது கணவர் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்ட பின் மீண்டும் பஸ்சில் ஏறினர். அப்போது பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணை மொபைல்போனில் புகைப்படம் எடுத்தார்.
இது குறித்து அந்த பெண், தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் மொபைல் போனை பறித்து பார்த்ததில், அந்த பெண்ணின் புகைப்படம் இருந்தது. இதையடுத்து அந்த பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார். தகவல் அறிந்த வேலுார் வடக்கு போலீசார், வேலுார் கிரீன் சர்க்கிள் அருகே பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வேலுார் வந்ததும், போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்த சையது இத்திரிஸ், 27, என்பது தெரியவந்தது. அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில், 16.30 லட்சம் ரூபாய் இருந்தது. போலீசார் அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சையது இத்திரிஸ் கொண்டு வந்தது ஹவாலா பணம் என தெரிய வந்துள்ளது. இவர் பெங்களூருவிலிருந்து, பணத்தை எடுத்து சென்று சென்னையில் உள்ள நபரிடம் ஒப்படைத்தால் அவருக்கு, 4,000 ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, வேலுார் வடக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெங்களூருவில் இருந்து யாரிடம் பணத்தை பெற்று, சென்னையில் யாரிடம் பணத்தை கொடுக்க சென்றார். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட, 16.30 லட்சம் ரூபாயை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.