/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காலை உணவு சாப்பிட்ட 14 மாணவியர் மயக்கம்
/
காலை உணவு சாப்பிட்ட 14 மாணவியர் மயக்கம்
ADDED : மார் 06, 2025 01:18 AM

திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அருகே உண்டு உறைவிட பள்ளியில் திடீரென மயக்கமடைந்த 14 மாணவியர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்டராயநல்லுாரில் கஸ்துாரிபாய் காந்தி வித்யாலயா என்ற பெயரில், உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு, 80 மாணவியர் படிக்கின்றனர்.
நேற்று பள்ளிக்கு 78 மாணவியர் வந்திருந்தனர். காலை 8:00 மணிக்கு பள்ளியில் வழங்கிய உணவை சாப்பிட்டு வகுப்பறைக்கு சென்றனர். 10:00 மணிக்கு 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென தலைவலி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, 6, 8 மற்றும் 9ம் வகுப்புகளை சேர்ந்த மாணவியர் 14 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது.
உடன் அனைவரும், ஆம்புலன்ஸ் மூலம் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவியருக்கு ரத்தம், சிறுநீரக மாதிரி எடுக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், 'உணவு மற்றும் குடிநீர் அருந்தியதில் மாணவியருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பரிசோதனை அறிக்கை வந்த பின் பாதிப்பு குறித்து தெரியவரும்' என்றனர்.