/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் ஒரே நாள் இரவில் 22 செ.மீ., மழை கொட்டியது: குளமாக மாறிய பஸ் நிலையம்; பொதுமக்கள் அவதி
/
விழுப்புரத்தில் ஒரே நாள் இரவில் 22 செ.மீ., மழை கொட்டியது: குளமாக மாறிய பஸ் நிலையம்; பொதுமக்கள் அவதி
விழுப்புரத்தில் ஒரே நாள் இரவில் 22 செ.மீ., மழை கொட்டியது: குளமாக மாறிய பஸ் நிலையம்; பொதுமக்கள் அவதி
விழுப்புரத்தில் ஒரே நாள் இரவில் 22 செ.மீ., மழை கொட்டியது: குளமாக மாறிய பஸ் நிலையம்; பொதுமக்கள் அவதி
ADDED : ஆக 12, 2024 06:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப்பின் 1:30 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்ய துவங்கியது.
தொடர்ந்து 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இதனால், விழுப்புரம் மற்றும் புறநகர் கிராமப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 7:00 மணி வரை பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் ஒரே இரவில் 22 செ.மீ., மழை பதிவானது.
சாதாரண மழைக்கே தாங்காத விழுப்புரம் நகரம், பலத்த மழையால் பல இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் 3 அடி வரை மழைநீர் தேங்கி தெப்பகுளமானது. இதனால், பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். பஸ்கள் வெளியேறும் வாயில் பகுதியில் நின்று பயணிகள் பஸ் ஏறினர்.
பலத்த மழை காரணமாக நள்ளிரவு 1:30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வழக்கம் போல் புதிய பஸ் நிலையத்தின் மழைநீர் பம்ப் அவுஸ் இயக்க முடியவில்லை. காலை 5:00 மணி முதல் ஜெனரேட்டர் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி தொடங்கியது.
இருந்த போதிலும், நேற்று மதியம் 2:00 மணி வரை குளம் போல் தேங்கிய நீரில் பயணிகள் உள்ளே செல்ல முடியாமல், பஸ் நிலையத்தின் வாயில் பகுதியில் நின்று பஸ் பிடித்துச்சென்றனர்.
ஒரே நேரத்தில் டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள் பிடிப்பதற்காக பயணிகள் வாயில் பகுதியில் திரண்டதால், அங்கு திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சீரமைத்தும் மாலை 4:00 மணி வரை நெரிசல் நிலை தொடர்ந்தது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, காணை, கண்டமங்கலம், திண்டிவனம், செஞ்சி, வானுார், மரக்காணம் என மாவட்டம் முழுதும், கனமழை கொட்டியது.
விழுப்புரத்தில் நள்ளிரவு 1:30 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம், நகரில் மட்டும் காலை 7:30 மணிக்கு பிறகு படிப்படியாக வழங்கப்பட்டது. இருந்த போதிலும் கிராம பகுதிகளுக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் மதியம் வரை வழங்கப்படவில்லை.
விழுப்புரத்தில் பல இடங்களில் எச்.டி., லைன்கள், மின்கம்ப இன்சுலேட்டர்கள், டிரான்ஸ்பார்மர்கள் பழுதானதால், மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக மின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேரிகார்டு வைத்து போலீசார் வாகனங்களை மாற்று சாலையில் திருப்பி விட்டனர். நேற்று மதியம் 1:00 மணி வரை தண்ணீர் வடியவில்லை.
நகராட்சி பள்ளி மைதானம் ஏரி போல் மழை நீருடன், கழிவு நீரும் தேங்கி நின்றது. தாமரைக்குளம் குடியிருப்பு பகுதியில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது. சாலாமேடு ஆசாகுளம் நரிக்குறவர் காலனியில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. முத்தோப்பு, சாலாமேடு, தந்தை பெரியார் நகர், வழுதரெட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், பல இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
சாலை மறியல்
மாம்பழப்பட்டு சாலை அருகே உள்ள இந்திரா நகர், ஸ்டாலின் நகர் குடியிருப்பு பொது மக்கள், நேற்று மதியம் 1:30 மணிக்கு, இந்திரா நகர் மேம்பாலத்தின் கீழ் திரண்டு மின்தடையை கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மேற்கு போலீசார், பேச்சு வார்த்தை விரைந்து மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 2:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
திண்டிவனம்
திண்டிவன மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால், திண்டிவனம் - புதுச்சேரி சாலையிலுள்ள மரக்காணம் கூட்ரோடு பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதே போல் குடியிருப்பு பகுதிகளான காந்திநகர், வகாப் நகர், விவேனகானந்தன் நகர், மன்னார்சாமி கோவில் பகுதி, கோபாலபுரம், சாய்லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், காவேரிப்பாக்கம் தரைப்பாலம் பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்தது.