/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு விழாவிற்கு முறையான அழைப்பில்லை; அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 'மனக்குமுறல்'
/
அரசு விழாவிற்கு முறையான அழைப்பில்லை; அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 'மனக்குமுறல்'
அரசு விழாவிற்கு முறையான அழைப்பில்லை; அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 'மனக்குமுறல்'
அரசு விழாவிற்கு முறையான அழைப்பில்லை; அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 'மனக்குமுறல்'
ADDED : ஆக 27, 2024 05:30 AM
விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். திண்டிவனம், வானுார் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும் வெற்றி பெற்றது.
மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு. எதிர்க்கட்சியை சேர்ந்த தங்களை முறைப்படி அழைப்பதில்லை என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், கடந்த வாரம் நடந்த அரசு விழாவில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ச்சுணன் பங்கேற்கவில்லை.
இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'இரு எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஒரு நாள் முன்னதாக ( ஆக.8 ம் தேதி) தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவதாக சொன்ன இருவரும் வரவில்லை' என தெரிவித்தனர்.
இது பற்றி எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ச்சுணன் ஆகியோரிடம் கேட்டபோது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களான தங்களை, அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணித்து வருகின்றனர். பெயரளவிற்கு தகவல் தெரிவிப்பார்கள். சில நேரம், நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அழைப்பு அனுப்புகின்றனர்.
அரசு சட்டக் கல்லுாரியில் நடந்த விழா 'நிகழ்ச்சி நிரலில்', தி.மு.க.,- பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவரது பெயரை தவிர்த்துள்ளனர். நாங்கள் வர மாட்டோம் என அதிகாரிகள் எப்படி முன் கூட்டியே கணித்தார்கள் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
வானுார் தொகுதியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய அமைச்சர் சண்முகம் பரிந்தரையின்பேரில், புதிய அரசு கலைக் கல்லுாரி அமைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து எம்.எல்.ஏ., சக்கரபாணி முயுற்சியால், கட்டுமான பணிகள் துவங்கியது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு கலைக் கல்லுாரி திறப்பு விழாவில், தொகுதி எம்.எல்.ஏ.,வான தனது பெயர் புறக்கணிக்கப்பட்டதாக சக்கரபாணி எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.