/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடுக்கு அனும: திநல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறாம்: ஆனந்த்
/
விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடுக்கு அனும: திநல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறாம்: ஆனந்த்
விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடுக்கு அனும: திநல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறாம்: ஆனந்த்
விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடுக்கு அனும: திநல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறாம்: ஆனந்த்
ADDED : செப் 07, 2024 05:29 AM

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் த.வெ.க., முதல் மாநாடு அனுமதிக்காக, காவல் துறையின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்துள்ளதால், நல்ல பதில் கிடைக்கும் என நம்புவதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் தெரிவித்தார்.
நடிகர் விஜயின் த.வெ.க., கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அந்த கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், கடந்த 28ம் தேதி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் வந்து, மாநாடுக்கு அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு மனு கொடுத்தனர். உடனே, ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் போலீஸ் குழுவினர், அந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு வந்தனர்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில், டி.எஸ்.பி., சுரேஷ் மூலம், த.வெ.க., ஆனந்துக்கு, கடந்த 2ம் தேதி கடிதம் அனுப்பினர். அதில், மாநாடு இடம், பாதுகாப்பு வசதிகள் குறித்தும், நிகழ்ச்சி நிரல், பங்கேற்கவுள்ள முக்கிய நபர்கள், ஆண், பெண், குழுந்தைகள் என எவ்வளவு பேர் வருவார்கள், அவர்களுக்கான உணவு, வாகனங்கள், அதற்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து 21 கேள்விகள் எழுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி குறிப்பிட்டிருந்தனர். அதனை வாங்கி பரிசீலனை செய்த நடிகர் விஜய் தரப்பு, அதற்கு நேற்று பதில் கடிதம் அளித்தனர்.
பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் வந்த முக்கிய நிர்வாகிகள், முருங்கப்பாளையம் வீதியில் உள்ள விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி., சுரேஷை சந்தித்து, அந்த பதில் கடிதத்தை வழங்கிவிட்டு, அது தொடர்பாக சிறிது நேரம் பேசினர். கடிதத்தை பெற்ற டி.எஸ்.பி., சுரேஷ், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, அனுமதி குறித்து நிருபர்கள் கேட்டபோது, உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, பதில் கூறுவதாக கூறிவிட்டுச் சென்றார்.
இந்த சந்திப்பு குறித்து, ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வி.சாலையில் நடத்த திட்டமிட்டு, அதற்கான இடத்தையும் தேர்வு செய்து, உரிய அனுமதிக்காக விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் மனு அளித்திருந்தோம். அவர்கள், மாநாடு இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை எழுப்பி கடிதம் அனுப்பினர்.
அவர்கள் கேட்டபடி 5 நாள்களில், அதற்குறிய பதிலை அளித்துள்ளோம். இதனை பெற்ற டி.எஸ்.பி., காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து இரண்டு நாளில் பதில் அளிப்பதாக கூறியுள்ளனர். நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம். அதன் பிறகு, தலைவர் விஜய் முடிவு செய்து, மாநாட்டு தேதி குறித்து உறுதியாக அறிவிப்பார் என்றார்.
மாநாடுக்கு வேறு இடம் பார்த்துள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, விக்கிரவாண்டியில் தான் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி கோரியுள்ளோம். அதற்கான பதில் வரட்டும். வேறு இடம் குறித்தெல்லாம் பிறகு பார்ப்போம் என்றார்.
அப்போது, மாநாடு அனுமதிக்கு, நெருக்கடி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆனந்த் பதிலளிக்காமல் சென்றார். விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கடிதம், விழுப்புரம் எஸ்.பி., மூலம், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு காவல் உயரதிகாரிகள், அரசு தரப்பில் பரிசீலனை செய்த பிறகு, மாநாடுக்கான அனுமதி குறித்த தகவல் வெளியாகும் என தெரிகிறது.