விழுப்புரம், : விழுப்புரத்தில், 'தினமலர்' நாளிதழ் மாதிரி நீட் தேர்வு, நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, காலை 9:30 மணிக்கே தேர்வு அறைக்கு மாணவர்கள் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனை பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடைபிடித்து சரியாக வந்தனர். காலை 8:30 மணிக்கே வெளியூர் மாணவர்கள் சிலர் வந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் பலர், சீருடையுடன் வந்திருந்தனர்.
வழக்கமான பரிசோதனைக்கு பிறகு, காலை 9:30 மணிக்கு ஹால் டிக்கெட் வழங்கி தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில மாணவர்கள், கடைசி நேரத்தில் 9:45 மணிக்கு அவசர, அவசரமாக ஓடிவந்து தேர்வில் பங்கேற்றனர்.
'நீட்' தேர்வில், தாமதத்தால் ஏற்படும் பதட்டத்தைத் தவிர்க்கவும், நீட் தேர்வின் நேரம், முன் கூட்டியே வர வேண்டிய அவசியத்தையும், மாணவர்கள் நன்கு உணர்ந்து, தேர்வுக்கு முன் கூட்டியே வந்துவிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

