/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 2.50 சதவீதம் கூடுதல் மழை பதிவு
/
ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 2.50 சதவீதம் கூடுதல் மழை பதிவு
ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 2.50 சதவீதம் கூடுதல் மழை பதிவு
ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 2.50 சதவீதம் கூடுதல் மழை பதிவு
ADDED : ஆக 13, 2024 06:28 AM

விழுப்புரம் மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 2.50 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதால், பல இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதத்தில், இயல்பான மழையாக சராசரியாக 108 மி.மீ. பதிவாகி வந்துள்ளது. ஆனால், இந்தாண்டு கடந்த 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை, மாவட்டத்தில் 284.95 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களில் சராசரியாக 181.80 மி.மீ அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, விழுப்புரம் தாலுகாவில் கடந்த 4 நாட்களில் மட்டும் 552 மி.மீ., மழையும், மரக்காணம் தாலுகாவில் 226 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
விழுப்புரம் தாலுகாவில் கடந்த 10ம் தேதி ஒரே நாளில் 220 மி.மீ., அளவிலும், 11ம் தேதி 130 மி.மீ., அளவிலும் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழையாகும்.
இதனால், விழுப்புரம் நகரில் பல இடங்களிலும், மழைநீர் அதிகளவு தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, கலெக்டர் பழனி தலைமையில் முக்கிய துறை அதிகாரிகள் பஸ் நிலையத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தனர். இரு தினங்களாக தேங்கியிருந்த மழை நீர் நேற்று மாலை வரை வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், கலெக்டர் பழனி தலைமையில், எம்.எல்.ஏ., லட்சுமணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உத்தண்டி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், தாசில்தார் வசந்தகிருஷ்ணன், நகராட்சி கமினுனர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா ஆகியோர், பஸ் நிலையத்தில் தேங்கும் தண்ணீரை மாற்று வழிகளில் வெளியேற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவது குறித்து, ஆய்வு செய்தனர்.
அப்போது, கலெக்டர் பழனி கூறுகையில், 'விழுப்புரம் நகரத்தில், இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூழ்ந்திருந்த மழைநீர் துாய்மைப் பணியாளர்கள், மோட்டார் மற்றும் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.-நமது நிருபர்-

