/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குப்பைகள் கொட்டி எரிப்பதால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு
/
குப்பைகள் கொட்டி எரிப்பதால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு
குப்பைகள் கொட்டி எரிப்பதால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு
குப்பைகள் கொட்டி எரிப்பதால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு
ADDED : மே 20, 2024 05:09 AM

விழுப்புரம் : விழுப்புரம் சாலாமேடு மெயின்ரோடு குடியிருப்பு பகுதியில், குப்பைகள் கொட்டி எரிப்பதால் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் தொடர்ந்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சி சாலாமேடு எஸ்.ஐ.எஸ்., நகர், மணி நகர் பகுதியில், ஏரிக்கரை ஒட்டிய பகுதியில் உள்ள காலி இடங்களில், பலர் குப்பைகள் கொட்டி வருகின்றனர். கே.கே.ரோடு, சாலாமேடு பிரதான இந்த மெயின் ரோடு பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு எரித்து வருகின்றனர்.
அந்த பகுதியில் தினசரி கோழி, மாடு இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகள் என தினசரி மூட்டை, மூட்டைகளாக குப்பைகள் கொட்டி வருகின்றனர். சாலையோரம் கொட்டப்படும் இந்த குப்பைகளை அடிக்கடி எரிப்பதால், புகை மூட்டம் எழுந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சாலாமேடு சிஸ் நகர், பிரண்ட்ஸ் நகர், மணி நகர், ஆசாகுளம் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்பு பகுதியும், அடுக்குமாடி குடியிருப்புகளும், எதிரே திருமண மண்டபமும், கடைகள், உணவகங்கள் உள்ள நிலையில், தினசரி கொட்டும் குப்பைகளில் பன்றிகள் திரிந்தும், துர்நாற்றம் வீசி வருகிறது.
அடிக்கடி குப்பை கள், டயர்களை போட்டு எரிப்பதாலும் சுகாதார சீர்கேடு தொடர்ந்து வருகிறது. விழுப்புரம்-தளவனூர் மெயின்ரோடு பகுதியாக இருப்பதால், ஏராளமான கிராம, நகர பொது மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி அவதிப்பட்டு செல்கின்றனர்.
இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், ஏற்கனவே குப்பை கொட்டுபவர்களை தடுத்து போராட்டங்கள் நடத்தியும், தொடர்ந்து அதே நிலை தொடர்கிறது. பல இடங்களில், நகராட்சி சார்பில் குப்பைகள் சேகரித்து உரமாக்கும் நுண்ணுர மையங்கள் இருந்தும், இதுபோல், திறந்த வெளி குடியிருப்பு பகுதியில் பலர் குப்பைகளை கொட்டி எரித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

