/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் செஞ்சி கோட்டையில் ஆய்வு ரோப்கார் அமைக்க அமைச்சர் மஸ்தான் வலியுறுத்தல்
/
மத்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் செஞ்சி கோட்டையில் ஆய்வு ரோப்கார் அமைக்க அமைச்சர் மஸ்தான் வலியுறுத்தல்
மத்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் செஞ்சி கோட்டையில் ஆய்வு ரோப்கார் அமைக்க அமைச்சர் மஸ்தான் வலியுறுத்தல்
மத்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் செஞ்சி கோட்டையில் ஆய்வு ரோப்கார் அமைக்க அமைச்சர் மஸ்தான் வலியுறுத்தல்
ADDED : ஆக 24, 2024 05:19 AM

செஞ்சி: செஞ்சி கோட்டையை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை கூடுதல் இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்தியவில் மராட்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த செஞ்சி கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த ஆண்டு யுனஸ்கோவிற்கு பரிந்துரைத்துள்ளது. அதனையேற்று அடுத்த சில மாதங்களில் யுனஸ்கோ குழுவினர் இந்தியவிற்கு வர உள்ளனர்.
அதற்கு முன்பாக இந்திய தொல்லியல் துறையினர் கோட்டைகளில் செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவினர் அடுத்த மாதம் 12 கோட்டைகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும், உள்ளூர் பொது மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இக்குழுவினர் வருகைக்கு முன்பாக செஞ்சி கோட்டையின் தற்போதைய நிலை, செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ஜான்விச் ஷர்மா நேற்று செஞ்சி கோட்டையில் அமைச்சர் மஸ்தான், கலெக்டர் பழனி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
அப்போது சுற்றுலா பயணிகளுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், செஞ்சி கோட்டை மலை மீது செல்வதற்கு ரோப்கார் வசதியை மத்திய அரசு செய்ய வேண்டும் என அமைச்சர் மஸ்தான் வலியுறுத்தினார்.
தொல்லியல் துறை மண்டல இயக்குநர் பதேக், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, செஞ்சி கோட்டை முதுநிலை உதவி பராமரிப்பு அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உலக சுற்றுலா
மத்திய அரசு செஞ்சி கோட்டையை காஞ்சிபுரம், மகாபலிபுரம் போன்று சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை துவங்கி உள்ளது. அதனையொட்டி தினசரி 5,000 சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்கான திட்டத்தை இந்திய தொல்லியல் துறையினர் தயாரித்து வருகின்றனர். அதற்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சார வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், சுற்றுலா பயணிகளை கவரும் பொழுது போக்கு அம்சங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், ஒளி, ஒலி காட்சி, புதிய பூங்காக்கள், சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து வல்லுநர் குழுவினர்களுடன் நேற்று ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வு அறிக்கையுடன் செஞ்சி கோட்டையில் ரோப்கார் வசதி செய்வதற்கு மத்திய அரசிடம் இந்திய தொல்லியல் துறையினர் பரிந்துரைக்க உள்ளனர்.
இந்த பணிகள் நிறைவடைந்து யுனெஸ்கோ செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சுற்றுலா தலமாக உருவெடுக்கும். இதன் மூலம் செஞ்சி நகர மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.