
மோட்டார் திருட முயன்றவர் கைது
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் கால்நடை மருந்தகம் பின்புறம் உள்ள பழைய கட்டடத்தில் இருந்த மின் மோட்டாரை ஒருவர் திருட முயன்றார். இதனைப் பார்த்த கால்நடை உதவி மருத்துவர் பேபி உஷா மற்றும் ஊழியர்கள் அவரை கையும் களமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் நாட்டார்மங்கலம் காட்டுகொட்டாயைச் சேர்ந்த கண்ணன், 45; என்பது தெரிந்தது. புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.
கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேசன், 28; இவர் தனது டாரஸ் லாரியை தம்மம்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கணேசன் என்பவருக்கு 11 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்று ஏப்ரல் 5ம் தேதி முன் பணமாக 3 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். மீதி பணத்தை 15 நாட்களுக்குள் தருவதாக கூறி கணேசன் லாரியை ஓட்டிச் சென்றார். நிலுவை தொகையை கேட்ட வெங்கடேசனை, திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புகாரின் பேரில், கணேசன் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் கடையில் திருட்டு
உளுந்துார்பேட்டை: ஏ. சாத்தனுாரில் ரேஷன் கடையில் இயங்கி வருகிறது. விற்பனையாளராக சத்யா பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 71 கிலோ சர்க்கரை, 52 பாக்கெட் பாமாயில், 36 கிலோ துவரம் பருப்பு திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒருவரை தாக்கிய தம்பதி மீது வழக்கு
தியாகதுருகம்: பெரியமாம்பட்டு முருகன், 45; இவர், கடந்த 31ம் தேதி, இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் இடங்களை அளவிடும் பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தார். அப்போது அப்பகுதி காலனியைச் சேர்ந்த காமராஜ், 50; ஊர் முக்கியஸ்தர்களை ஆபாசமாக திட்டினார். சிறிது நேரத்தில், காமராஜின் வீட்டின் முன் நடந்த சென்ற முருகனை வழிமறித்து காமராஜ், அவரது மனைவி லதா ஆகிய இருவரும் திட்டி தாக்கினர்.
புகாரின்பேரில், காமராஜ், லதா ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முன்விரோத தகராறு: தம்பதி மீது வழக்கு
உளுந்துார்பேட்டை: எறையூரைச் சேர்ந்தவர் சூசைநாதன் மகன் பிரான்சிஸ் சேவியர், 24; அதே பகுதியைச் சேர்ந்தவர் மிக்கேல், 56; இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் பிரான்சிஸ் சேவியரை வீட்டிற்கு வரவழைத்து மிக்கேலும், அவரது மனைவி கனிகா மேரியும் திட்டி, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் மைக்கேல், கனிகாமேரி ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இரு தரப்பு மோதல்: 2 பேர் கைது
ரிஷிவந்தியம்: இளையனார்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 44; இவரது உறவினர் ராஜேந்திரன். இருவருக்குமிடையே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 31ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பு புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார், 7 பேர் மீது வழக்குப் பதிந்து ராஜேந்திரன்,48; கோவிந்தன், 44; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை
உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை நம்பிக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முருகவேல், 60; கூலித் தொழிலாளி. இவர், சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் வலி அதிகமானதால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார்.
எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெண்ணிடம் தகராறு: வாலிபர் கைது
திண்டிவனம்: ஒலக்கூர் அடுத்த முருங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பாஷா மனைவி ரபீஜா, 50; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த துளசிங்கம், 33; என்பவர் தகராறு செய்துள்ளார்.
புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து துளசிங்கத்தை கைது செய்தனர்.