/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்பாதி கோவில் திறப்பு மக்களுக்கு அனுமதி மறுப்பு
/
மேல்பாதி கோவில் திறப்பு மக்களுக்கு அனுமதி மறுப்பு
ADDED : மார் 23, 2024 01:49 AM

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜர் திரவுபதி அம்மன் கோவிலில், கடந்தாண்டு ஏப்ரல் 7ம் தேதி நடந்த தீமிதி விழாவில், இரு சமூகத்தினரிடையே வழிபாடு செய்வதில் மோதல் ஏற்பட்டது.
கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சில் ஒரு தரப்பினர் அறநிலையத்துறையின் பொது கோவில், அனைவரும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றனர்.
மற்றொரு தரப்பினர், தங்களின் மூதாதையர் கால குலதெய்வ கோவில் எனக்கூறி, பொது நிர்வாக வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கடந்தாண்டு ஜூன் 7ம் தேதி, ஆர்.டி.ஓ., தலைமையில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிலைத் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என, பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், கோவிலைத் திறந்து, அறநிலையத்துறை மூலம், பொது அர்ச்சகரை நியமித்து பூஜை செய்ய, கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று காலை 6:00 மணிக்கு, தாசில்தார் வசந்தகிருஷ்ணன், அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் தலைமையில், சீல் அகற்றி கோவில் கதவுகளை திறந்து, துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சந்திரசேகர், காலை 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பூஜை செய்தார். ஒரு கால பூஜை முடிந்ததும் காலை 7:30 மணிக்கு மீண்டும் கோவில் கதவுகள் மூடி சீல் வைக்கப்பட்டது.
கோவில் பகுதியில், 144 தடை உத்தரவு தொடர்வதால், பொது மக்கள் வழிபட அனுமதியில்லை. அர்ச்சகர் மட்டும் தினமும், போலீஸ் பாதுகாப்புடன் பூஜை செய்துவிட்டு செல்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

